புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க. பிரமுகர் கார் எரிப்பு வழக்கில் 4 பேர் கைது

புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க. பிரமுகர் கார் எரிப்பு வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-29 21:28 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க. பிரமுகர் கார் எரிப்பு வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

டயர்கள் எரிப்பு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சிலர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறி நாடு முழுவதும் உள்ள அந்த அமைப்பின் நிர்வாகிகளை தேசிய புலனாய்வு முகமை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தது. இதை கண்டித்து ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் ரோடு சந்திப்பில் கடந்த 22-ந் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பவானிசாகர் ரோட்டில் உள்ள எஸ்.ஆர்.டி.நகர் அருகே ெமாபட்டில் வந்த 2 பேர் நடுரோட்டில் டயர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தேடுதல் வேட்டை

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அதிகாலை எஸ்.ஆர்.டி. நகர் 2-வது வீதியில் நிறுத்தப்பட்டு இருந்த பா.ஜ.க. பிரமுகர் சிவசேகருக்கு சொந்தமான கார் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மேற்பார்வையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் 2 வழக்குகளிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

4 பேர் கைது

இதில் கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த கமருதீன் என்பவர் கோவை மாவட்டம் பேரூர் பச்சாபாளையத்தில் தங்கியிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை புஞ்சைபுளியம்பட்டி அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் பா.ஜ.க. பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசியதாகவும், ரோட்டில் டயர் எரித்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த அப்துல் வகாப், நியமத்துல்லா, முகமது உசைன் ஆகியோரையும் கைது செய்தனர். பின்னர் 4 பேரும் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்