பதிவு இல்லாததால் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கட்டணம் செலுத்தும் நிலை
இலவச கல்வி கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு பதிவு இல்லாததால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சாயல்குடி,
இலவச கல்வி கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு பதிவு இல்லாததால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இணையதளத்தில் பதிவு
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. சேரும் மாணவர்கள் ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் 25 சதவீதம் இலவச கல்வி கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் ஆன்லைனில் பதிவு செய்து கல்வி பயின்று வருகின்றனர். தற்போது ஆன்லைனில் பதிவு செய்து பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் பதிவுகள் இல்லாததால் இலவச கல்வி கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் அவதியிற்று வருகின்றனர்.
இதுகுறித்து கடலாடி பகுதியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், தனியார் பள்ளிகளில் இலவச கல்வி கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் இலவச கல்வியில் மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வி இணையதளத்தில் தனியார் பள்ளியில் இலவச கல்வி பெறும் ஏழை மாணவர்கள் பதிவு செய்து தனியார் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை தொடர்ந்து வந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் இலவச கல்வியில் பதிவு செய்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதிவு இல்லாமல் விடுபட்டுள்ளது.
கட்டணம் செலுத்தும் நிலை
பதிவு விடுபட்டதால் தனியார் பள்ளிகளுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் அங்கு பயிலும் ஏழை மாணவர்கள் இலவச கல்வி இல்லாமல் மற்றவர்களை போன்று பணம் செலுத்தி கல்வி கற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் பதிவு இல்லாத மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எங்களை போன்ற பெற்றோர்கள் பணம் செலுத்த முடியாமல் வேதனையில் உள்ளனர்.
இடைநிற்றல் ஏற்படும் நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு அறிவித்தபடி முறையாக பதிவு செய்த மாணவ, மாணவிகளின் பெயர்கள் இடம் பெறாதது குறித்து பள்ளி கல்வித்துறை விசாரணை செய்து அவர்களின் பெயர்களை பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கை
மேலும், இலவச கல்வியில் தனியார் பள்ளியில் ஆன்லைனில் பதிவு விடுபட்ட மாணவ, மாணவிகளை தனியார் பள்ளிகளில் இலவச கல்வி கிடைப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு இலவச கல்வி கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் பதிவு விடுபட்ட மாணவர்கள் கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.