தனியார்பள்ளிகளில் 1,652 மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1,652 மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2023-05-25 19:58 GMT


விருதுநகர் மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1,652 மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீடு

மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய அரசே வழங்கி வருகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 18-ந் தேதி வரை பெறப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 2,600 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் மாவட்ட தனியார் பள்ளிக்கல்வி அதிகாரி பாண்டி செல்வி தலைமையில் பரிசீலிக்கப்பட்டது.

குலுக்கல் முறை

தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதற்கான விவரம் மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான காரணங்கள் குறித்து மே 21-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 153 தனியார் பள்ளிகளின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 1,652 இடங்கள் உள்ள நிலையில் இதற்கு 2,600 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

கடந்த ஆண்டு 2,574 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில் மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடைபெற்றது.

காத்திருப்போர் பட்டியல்

இதில் தேர்வு செய்யப்பட்ட 1,652 மாணவ-மாணவிகள் பெயர் பட்டியல் மற்றும் அதன் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் 5 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கைக்கு வராத பட்சத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்கள் அப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் வருகிற 29-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்