தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் மீட்பு

பேய்க்குளம் அருகே குருகால்பேரியில் தனியார் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அரசு நிலம் மீட்கப்பட்டது. வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை அதிகாரிகள் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Update: 2022-06-28 14:05 GMT

சாத்தான்குளம்:

பேய்க்குளம் அருகே குருகால்பேரியில் தனியார் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அரசு நிலம் மீட்கப்பட்டது. வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை அதிகாரிகள் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அரசு நிலம் ஆக்கிரமிப்பு

பேய்க்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட குருகால்பேரி அருந்ததியர் காலனி அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மரங்கள் நடப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் அருகே 23 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் கம்பிவேலி அமைத்து தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் சாத்தான்குளம் வருவாய்த் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆழ்வார்திருநகரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு நேற்று காலையில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது தனியார் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது.

அரசு நிலம் மீட்பு

இதை தொடர்ந்து தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தில் இருந்த கம்பிவேலி உள்ளிட்டவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். பின்னர் அந்த அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டு பலகை வைத்தனர்.

இந்த பணியின் போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், சர்வேயர் ஜெயசுதா, வருவாய் ஆய்வாளர் ஜெயா, கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பசாமி, டாலி சுபலா, துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யப்பட்டு கையகப்படுத்தப்படும் என சாத்தான்குளம் தாசில்தார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்