பூம்புகாரில், கிராம மக்கள் உண்ணாவிரதம்

இறால் குட்டை உரிமையாளர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பூம்புகாரில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடைகளும் அடைக்கப்பட்டன.

Update: 2022-12-15 18:45 GMT

திருவெண்காடு:

இறால் குட்டை உரிமையாளர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பூம்புகாரில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடைகளும் அடைக்கப்பட்டன.

இறால் திருட்டு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் பகுதியில் அரசு அனுமதி பெற்று, சிறு தொழிலாக பலர் தங்களுடைய இடங்களில் கடற்கரையையொட்டி இறால் குட்டைகளை அமைத்து இறால் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் பெய்த கனமழையால் இந்த இறால் குட்டைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் இறால் பண்ணை உரிமையாளர்கள் பெருத்த நஷ்டம் அடைந்தனர். இதனிடையே இறால் குட்டையில் இறால்களை இரவு நேரத்தில் சிலர் திருடிசென்றனர்.இதுகுறித்து அவர்களிடம் இறால் குட்டை உரிமையாளர்கள் கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயம் அடைந்த இருதரப்பை சேர்ந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உண்ணாவிரதம்

இதுதொடர்பாக பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி இறால் பண்ணை தரப்பினருக்கு ஆதரவாக நேற்று பூம்புகார் தர்மகுளம் கடைத்தெருவில் கீழையூர், நெய்த வாசல், பழையகரம், வானகிரி, மேலையூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகரத்தினம், அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறால் குட்டை உரிமையாளர்களை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளிதத்னர்.

கடைகள் அடைப்பு

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தையொட்டி தர்ம குளம் கடைத்தெருவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்