பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்

பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2022-08-31 14:15 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி

விநாயக பெருமான் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. டி.கோட்டாம்பட்டி பாலாஜி நகர் கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிலை கண் திறப்பு, 5.15 மணிக்கு மகா கணபதி ஹோமம், 6 மணிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மேலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட 6 அடி உயர விநாயகரை பொதுமக்கள் தரிசனம் செய்தனர். காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 4 மணிக்கு கற்பக விநாயகர் திருவீதி உலா நடைபெறுகிறது. வடுகபாளையத்தில் உள்ள மகா கணபதி கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பொள்ளாச்சி ஜூபிளி கிணறு வீதியில் விநாயகர் சேவா சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது கணபதி ஹோமம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. நாளை (வெள்ளிக்கிழமை) விநாயகர் திருவீதி உலா சென்று விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வெள்ளி கவச அலங்காரம்

எஸ்.எஸ்.கோவில் வீதி, கரிகாலன்சோழன் வீதி சந்திப்பில் சந்தான விநாயகர் கோவில் உள்ளது. கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து விநாயகர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று அரசமரத்தடி விநாயகருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில் உள்ள பாலஸ்வர்ண கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

பொள்ளாச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி கிழக்கு, மேற்கு, தாலுகா, வடக்கிபாளையம், நெகமம், கோமங்கலம் ஆகிய போலீஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்கள், பல்வேறு சங்கங்கத்தினர், இந்து அமைப்பினர் உள்பட மொத்தம் 222 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

இதையொட்டி பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபசுஜிதா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலம் நடைபெறும் நாள் வரை சிலைக்கு பாதுகாப்பு அளிக்கப்படடு உள்ளது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில்  விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கிணத்துக்கடவு, கிருஷ்ணசாமிபுரம், அண்ணாநகர், கல்லாங்காட்டு புதூர், பகவதி பாளையம், தாமரைக்குளம், மாளேகவுண்டன்பாளையம், கோவில்பாளையம், கோடங்கி பாளையம், சிங்கையன் புதூர், சொக்கனூர், கொண்டம்பட்டி, அரசம்பாளையம், உள்ளிட்ட பல இடங்களில் இந்து முன்னணி 33 சார்பில் சிலைகளும், பொதுமக்கள் சார்பில் 9 சிலைகளும், மொத்தம் 42 சிலைகள் அமைக்க கிணத்துக்கடவு போலீசார் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. நேற்று விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு அனைத்து சிலைகளுக்கும் சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பொருட்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கிணத்துக்கடவு ஆதிபட்டி விநாயகர் கோவிலில் விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் சில சிலைகள் உள்ளூரிலே கரைக்கப்படுகிறது. மற்றசிலைகள் அனைத்தும் 2-ம் தேதி மாலை 3 மணிக்கு எடுக்கபட்டு கிணத்துக்கடவு பஸ் நிலையம் முன்பு கொண்டு வரப்படுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் அனைத்தும் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது அதுவரை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து விநாயகர் சிலைகள் போலீசார் மற்றும் சிலைகளை வைத்துள்ள இந்து முன்னணியினர், பொதுமக்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.இந்த பணிகளை கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதிகளில வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

வால்பாறை

இந்து முன்னணி சார்பில் வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி ஆகிய போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

108 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் வருகிற 4-ந் தேதி ஊர்வலமாக வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு மீண்டும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நடுமலை ஆற்றில் விநாயகர் சிலைகள் அனைத்தும் விஜர்சனம் செய்யப்படுகிறது.

இதை முன்னிட்டு வால்பாறை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் உத்தரவின் பேரில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் போலீசார் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொது இடங்களில் ஆனந்தவிநாயகர், சித்திவிநாயகர், குபேர விநாயகர் என பல பெயர்கள் கொண்ட 2 அடி முதல் 9 அடி உயரம் அளவிலான விநாயகரின் பல்வேறு வண்ண சிலைகள் என மொத்தம் 38 இடங்களில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் என பல வகையான பொருட்கள் படைக்கப்பட்டு, விநாயகர் சிலைகள் அலங்கரிக்கபபட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட விநாயகர் சிலைகள் செஞ்சேரி பிரிவில் உள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.  இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு செஞ்சேரிப்பிரிவு பி.ஏ.பி.வாய்காலில் விசர்ஜனம் (சிலைகரைப்பு) செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு  சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

ஆனைமலை

ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேட்டைக்காரன் புதூர், ஒடைய குளம், காலியாபுரம், சின்னப்பம்பாளையம், சுப்பைய கவுண்டன்புதூர், சேத்துமடை ஆகிய பகுதிகளில் சுமார் 100 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு கணபதி ஹோமம் நடைபெற்றது. மேலும் ஆனைமலை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைக்கு பூக்கள் வைத்து அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும். சிறுவர்களுக்கான கபடி போட்டி, ஓட்டப்பந்தயம், உரியடித்தல் இசை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது. நாளை மாலை ஊர்வலமாக சென்று ஆனைமலை ஆற்றங்கரையில் விநாயகர் சிலையை விஜர்சனம் செய்யப்படுகிறது. ஆனைமலை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்