ஊட்டியில் ரூ.13 கோடியில் ஆவின் பாலாடை கட்டி தயாரிப்பு திட்டம் தொடங்கப்படும்-சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் தகவல்

ஊட்டியில் ரூ.13 கோடியில் ஆவின் பாலாடை கட்டி தயாரிப்பு திட்டம் தொடங்கப்படும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் தெரிவித்தார்.

Update: 2022-09-20 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் ரூ.13 கோடியில் ஆவின் பாலாடை கட்டி தயாரிப்பு திட்டம் தொடங்கப்படும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் தெரிவித்தார்.

ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக் குழு தலைவர் உதயசூரியன் தலைமையில் உறுப்பினர்கள் அர்ஜுணன், செல்வராஜ், கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரூ.8.20 கோடி மதிப்பில் புனரமைக்கப்படவுள்ள ஊட்டி அரசு கலைக்கல்லூரியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். வேளாண்மை பொறியில் துறையின் சார்பில், ஊட்டி ரோஜா பூங்காவில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தினையும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில், ஊட்டிபடகு இல்லத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் பயோ டாய்லெட் அமைக்கப்பட்டதையும், முத்தொரை பாலாடா பகுதியிலுள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.

பாலாடை கட்டி தயாரிப்பு

இதையடுத்து தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவிற்கு பெறப்பட்ட மனுக்களில் 50 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உறுதிமொழிக்குழுத் தலைவர் உதயசூரியன் கூறியதாவது:- ஊட்டியில் ஆவின் மூலம் சீஸ் எஸ்பிரட், சீஸ் சிலைஸ் தயாரிப்பதற்கு, நபார்டு வங்கி நிதியுதவி பெற்று ரூ.13.14 கோடி மதிப்பீட்டில் புதிய பாலாடை கட்டி தயாரிக்கும் அலகு நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்திலுள்ள தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊட்டியில் பார்க்கிங் வசதி செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆய்வின்போது, தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காரம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்