நெய்வேலியில் நாட்டுத்துப்பாக்கியை காட்டி வாலிபருக்கு கொலை மிரட்டல் 4 பேர் கைது

நெய்வேலியில் நாட்டுத்துப்பாக்கியை காட்டி வாலிபரை மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-02-16 18:45 GMT

நெய்வேலி,

நெய்வேலி 21-வது வட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் மணிகண்டன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் காக்கா என்கிற அசோக்குமார் (23) கடந்த ஓராண்டுக்கு முன்பு கஞ்சா விற்பதாக கூறி அவரை அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து மணிகண்டன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன், வட்டம் 21-ல் உள்ள அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுப்பிரமணியன் மகன் அரவிந்தன் (23), சுந்தரசெல்வன் (23), முருகவேல் மகன் கொசு என்கிற கணேஷ்குமார் (28) ஆகியோர் மணிகண்டனை வழிமறித்துள்ளனர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டல்

பின்னர் அவர்கள் முன்விரோதம் காரணமாக மணிகண்டனை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். மேலும் அவரை கீழே தள்ளி நாட்டுத்துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன், நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமார், அரவிந்தன், சுந்தரசெல்வன், கணேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்