நெரூர் பகுதியில் கோரைப்பயிர் அறுவடை பணி மும்முரம்

நெரூர் பகுதியில் கோரைப்பயிர் அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-08-22 18:30 GMT

கோரை விவசாயம்

நெல், கரும்பு, வாழை பயிர்களுக்கு மாற்றாக கரூர் மாவட்டத்தில் கோரை விவசாயம் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை காவிரி ஆற்றுப்பகுதியில் 3 ஆயிரம் ஏக்கரில் கோரை விவசாயம் நடைபெற்று வருகிறது. நெரூர், நொய்யல், செவ்வந்திபாளையம் கடம்பன்குறிச்சி, அரங்கநாதன்பேட்டை, அச்சமாபுரம், கட்டளை, மாயனூர், மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் கோரைப்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது-

இந்த கோரைப்பயிரில் நோய்கள் அதிகளவில் தாக்காது. தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது. அதாவது மழை, காற்று, வெப்பம் உள்ளிட்ட கால நிலைகளுக்கு கோரை விவசாயம் ஏற்றத்தக்கது. மேலும் பூச்சிகள் தாக்காது. உரச்செலவுகள் இந்த விவசாயத்தில் குறைவு. பண்ணை ஆட்கள் தேவையும் குறைவு. முறையாக களையெடுத்து நாக்குறிஞ்சி என்ற மற்றொரு புல் ரகம் உள்ளே வராமல் இருந்தால் நல்லது. ஆண்டுக்கு இருமுறை மகசூல் எடுக்கலாம்.

ரூ.1,100-க்கு விற்பனை

கோரைப்பயிரில் ஒரு கட்டு என்பது 5 முதல் 8 முடி வரை வருவது ஆகும். 1 ஏக்கருக்கு சுமார் 80 கட்டு முதல் 100 கட்டு வரை வரும். ஒரு கட்டு தற்போது ரூ.1,050 முதல் ரூ.1,100 வரை சில்லரை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் கோரை விளையும் இடங்களுக்கே வந்து வாங்கி செல்கிறார்கள். ஒரு சில வியாபாரிகள் இந்த கோரையை வாங்கி பாய் மக்கத்திற்கு கொடுத்து அதில் ஒத்தக்கோரை, இரட்டைக்கோரை, ஜக்கார்டு (டிசைன்கள்) மட்டுமில்லாமல் அளவுக்கேற்றவாறு பாய்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, கடந்த ஆண்டுகளில் ஒரு கட்டு ரூ.1,700 முதல் ரூ.1,800 வரை விற்பனை ஆனது. கொரோனா காலக்கட்டத்தில் ரூ.700 முதல் ரூ.800 வரை தான் விற்பனை ஆனது. தற்போது ரூ.1,100 வரை மட்டுமே விற்பனை ஆகிறது. ஒரு கட்டு கோரைப்பயிருக்கு உரம், கோரை அறுப்பது உள்ளிட்டவற்றுக்கு ரூ.800 வரை செலவு ஆகிறது. இதனால் பெரிய அளவில் லாபம் எதுவும் இருக்காது, என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்