நீடாமங்கலத்தில், போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

நீடாமங்கலத்தில், போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Update: 2023-06-01 18:45 GMT

கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் நீடாமங்கலத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

நாகப்பட்டினம் முதல் தஞ்சை வரையிலான சாலை சீரமைப்பு பணிகளும், கழிவு நீர் வடிகால் சீரமைப்பு பணிகளும் நீடாமங்கலத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் நீடாமங்கலம் கடைவீதிகளில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. வடிகால் அமைக்க சாலையின் வலது- இடது பக்கங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தஞ்சை சாலை பகுதியில் சிறுபாலம் கட்டும் பணியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஏராளமான கார்கள், வேன்கள், லாரிகள், பஸ்கள், இருசக்கர வாகனங்கள் நாள்தோறும் பல்வேறு ஊர்களிலிருந்து நீடாமங்கலத்தை கடந்து செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பஸ்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் நீடாமங்கலம் வழியாக செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் உள்ளூர் மக்களும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

மாற்றுவழிப்பாதை திட்டங்கள்

குறிப்பாக அரசு- தனியார் துறைகளில் பணியாற்றுவோர், மருத்துவத்திற்காக வெளியூர் செல்வோர், அவசர கால பணிகளுக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தநிலையில் ெரயில்கள் மற்றும் சரக்கு ெரயில்கள் போக்குவரத்து நடைபெறும் போது ெரயில்வே கேட் மூடப்படுவதால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு நெரிசல்கள் ஏற்படுகிறது.

நாளுக்கு நாள் நீடாமங்கலத்தில் போக்குவரத்து ெநரிசல் அதிகரித்து வருகிறது.

எனவே மாற்றுவழிப்பாதை திட்டங்களை துரிதப்படுத்தினால் மட்டுமே நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். நேற்று முகூர்த்த நாள் என்பதால் நீடாமங்கலத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர். இதனால் 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 1 மணிநேரம் ஆனது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருவாரூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்