மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் நீரில் மூழ்கின
மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் நீரில் மூழ்கின
தொடர் மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் நீரில் மூழ்கின. நெல்மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
93 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி
கடந்த மாதம் மே 24-ந்தேதியே மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்கூட்டியே குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. மாவட்டத்தில் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்கூட்டியே பயிரிடப்பட்ட குறுவை பயிர் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது.
மழைநீரில் மூழ்கின
மேலும் சில நாட்களாக தொடர்ந்து மழை ெபய்து வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்கள் அனைத்திலும் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வயல்களில் சூழ்ந்துள்ள தண்ணீரை வடிகட்டுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறுவை பயிர்கள் மழைநீரில் மூழ்கி சாய்ந்தன. மேலும் நெல்மணிகள் முளைக்க தொடங்கி உள்ளன.
இதேபோல் மயிலாடுதுறை தாலுகா முட்டம், அகரகீரங்குடி பகுதிகளில் 350 ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள், தொடர் மழையின் காரணமாக வயலில் சாய்ந்து நீரில் மூழ்கி நெற்கதிர்கள் முளைவிட்டுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகி உள்ளனர்.
உரிய நிவாரணம்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்த மழையின் காரணமாக பயிரிடப்பட்டுள்ள 92 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிரில் 20 ஆயிரம் ஏக்கர் வரை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும் நெல்மணிகள் முளைக்க தொடங்கி உள்ளன. நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை நெற்பயிருக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என்றனர்.