மனோராவில் ரூ. 1.78 கோடியில் மேம்பாட்டு பணிகள்

மனோராவில் ரூ. 1.78 கோடியில் மேம்பாட்டு பணிகள்

Update: 2022-10-20 20:10 GMT

சேதுபாவாசத்திரம் அருகே மனோராவில் ரூ.1.78 கோடியில் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பயிற்சி மையக்கட்டிடம் திறப்பு விழா

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலாத்தலத்தில் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில் சிறுவர் பூங்கா, படகு குழாம், சிற்றுண்டியகம், பயிற்சி மையக்கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா வரவேற்றார். இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ரூ. 49 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் படகு குழாம், ரூ.43 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பயிற்சி மையக்கட்டிடம், குழந்தைகள் பூங்கா, சிற்றுண்டியகம் உள்ளிட்ட ரூ. 1 கோடியே 78 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மனோரா சுற்றுலாத்தலம் தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகுதியாக உள்ளது. இங்கு நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் தமிழகம் அளவில் மக்கள் சுற்றுலா வந்து செல்லக்கூடிய வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

பராமரிக்க வேண்டும்

மனோரா என்றால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நினைவுகள் வரும், ஆனால் எங்களுக்கெல்லாம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இங்கு வந்து தங்கி இருந்து புதையல் படத்திற்கு கதை வசனம் எழுதியது தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தி.மு.க. வரலாற்றில் மனோரா இடம் பெற்றுள்ளது.

இங்கு படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. படகில் சுற்றுலா செல்பவர்கள் பாதுகாப்பான முறையில் சென்று வர, மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனோராவை மேம்படுத்த அரசு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இப்பகுதி மக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மனோராவை பத்திரமாக பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், அண்ணாதுரை, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா பேகம், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மீனவ ராஜன், மாநில மீனவர் பேரவை பொதுச்செயலாளர் தாஜூதீன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்