மதுரையில் தக்காளிக்கு போட்டியாக மாறிய சின்ன வெங்காயம்- ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனை
மதுரையில் வரத்து குறைவால் தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் எகிறியுள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனையானது.
மதுரையில் வரத்து குறைவால் தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் எகிறியுள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனையானது.
மாட்டுத்தாவணி மார்க்கெட்
தென் மாவட்டங்களில் மிக முக்கிய மார்க்கெட்டாக, மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன.
இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.. இதுபோல் மதுரையில் உள்ள சில்லறை வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டுக்கு வந்துதான் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
சில தினங்களாக தக்காளியின் விலை உச்சத்தில் உள்ளது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும் மேல் விற்பனையாகி இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
அதன் தாக்கம் குறைவதற்குள் தற்போது சின்ன வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வரத்து குறைவு
அதாவது, மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு விருதுநகர், திண்டுக்கல், தாராபுரம், தேனி உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிக அளவில் சின்னவெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால், தற்போது தமிழகத்திற்கு விளைச்சலாகும் இந்த நாட்டு வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து சின்ன வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கும் போதிய அளவில் விளைச்சல் இல்லாத காரணத்தால், ஒட்டுமொத்தமாகவே வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், மதுரை மாட்டுத்தாவணி மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் தரத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. சில்லறை விற்பனையை பொறுத்தமட்டில், மதுரையில் ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனையாகிறது. பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.30, ரூ.40-க்கு விற்பனையாகிறது.
காரணம் என்ன?
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
பொதுவாக மழைக்காலங்களில்தான் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும். ஆனால், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக, வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த விலை ஏற்றம் உள்ளது.
தமிழகத்தில் உற்பத்தியாகும் நாட்டுக்காய்கள் எந்த இடத்திலும் இல்லை. இதனால், வெளிமாநிலங்களில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். அதுவும் போதிய அளவு இல்லாததால் குறைந்த அளவில் தான் கிடைக்கிறது. இன்னும் சில தினங்களில் சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றின் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.