ஈரோட்டில் கடந்த 10 நாட்களில் ரயான் நூல் விலை கிலோவுக்கு ரூ.25 உயர்வு விசைத்தறியாளர்கள் பாதிப்பு

விசைத்தறியாளர்கள் பாதிப்பு

Update: 2022-12-17 19:30 GMT

ஈரோட்டில் கடந்த 10 நாட்களில் ரயான் நூல் விலை கிலோவுக்கு ரூ.25 வரை உயர்ந்ததால் விசைத்தறியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ரயான் நூல்

ஈரோடு மாவட்டத்தில் ரயான் நூல் மூலம் துணிகள் உற்பத்தியாகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக ரயான் நூல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் விசைத்தறியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுபற்றி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:-

கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் செயற்கை இழை துணி, விசைத்தறி மற்றும் தானியங்கி தறிகளில் உற்பத்தியாகிறது. இந்த பகுதியில் 1 லட்சம் தறிகளுக்கு மேல் ரயான் நூல் மூலம் துணிகள் உற்பத்தியாகிறது. இந்த துணிகள் 90 லட்சம் மீட்டருக்கு மேல், வடமாநில வியாபாரிகள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த தீபாவளிக்கு பின்னர் துணி ஆர்டர் மிகவும் குறைந்ததுடன், குஜராத் உள்ளிட்ட சில மாநில தேர்தலாலும், துணி உற்பத்தி பாதியாக குறைந்தது. இதற்கு மாற்றாக ஈரோடு பகுதியில் உள்ள தறிகளில் அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி நடந்து வருகிறது. அதேநேரம், உற்பத்தி செய்யப்பட்ட ரயான் துணி ஒரு மீட்டர், 50 காசுகள் நஷ்டத்தில் கடந்த, 1-ந்தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. 120 கிராம் துணி 23 ரூபாய் 25 காசுக்கும், 140 கிராம் துணி 26 முதல் 26 ரூபாய் 25 காசுக்கும் விற்பனையாகிறது.

நஷ்டம்

கடந்த 8-ந்தேதி ரூ.176-க்கு விற்பனையான 30 கவுண்ட் செயற்கை இழை நூல் நேற்று ரூ.200-க்கு விற்பனையானது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கிலோவுக்கு ரூ.24 முதல் ரூ.25 வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு மீட்டர் துணி 1 ரூபாய் 75 காசு முதல், 2 ரூபாய் வரை மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால் விசைத்தறியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் நூல், தற்போது ரூ.185-க்கு கிடைக்கிறது. கடந்த காலங்களில் இறக்குமதி நூல் விலையைவிட, இங்குள்ள நூல் ரூ.5 முதல் ரூ.6 வரை மட்டுமே விலை உயர்ந்து காணப்படும். ஆனால் தற்போது ரூ.15-க்கு மேல் அதிகமாகி உள்ளது. எனவே மத்திய அரசு தலையிட்டு, இறக்குமதி நூல் விலைக்கேற்ப, இங்குள்ள நூல் விலையை சீராக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்