கோவில்பட்டி, விளாத்திகுளத்தில்அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கோவில்பட்டி (கிழக்கு):
சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து நேற்று கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் எம். ஆர். பி.செவிலியர்கள் தங்களுடைய பணி நியமனம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவ இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்தும், எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் நவநீத கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலர் உமாதேவி, வட்டச் செயலர் பிரான்சிஸ், வணிகவரித்துறை சங்க மாவட்ட செயலர் நடராஜன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநிலச் செயலர் ஹரி பாலகிருஷ்ணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார், நில அளவைத்துறை மாவட்ட செயலர் காளிராஜ் உட்பட அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்
இதேபோன்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க விளாத்திகுளம் வட்ட துணைத் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் பாலமுருகன், மாவட்டத் துணைத் தலைவர் சரவண பெருமாள், அரசு ஊழியர் சங்க விளாத்திகுளம் வட்ட இணைச் செயலாளர் அருள்ராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜாராம், ஆறுமுகம், செல்வகுமார், கார்த்தி, கிராம உதவியாளர் சங்கம், சுகாதாரத் துறை மற்றும் பேரூராட்சி துறை சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.