கோவில்பட்டி நகரில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள500 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்:நகராட்சி தலைவர்

கோவில்பட்டி நகரில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள500 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என நகராட்சி தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-30 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சி் சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் ஓ.ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து நகராட்சி தலைவர் பேசுகையில், கோவில்பட்டி நகராட்சி பகுதியில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள 500 குடிநீர் இணைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க ஸ்கேன் எந்திரம் வாங்க உள்ளோம். இதனை கொண்டு முறையற்ற வகையில் கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். பிரதான சாலையோரம் உள்ள கடைகளுக்கு குடிநீர் வேண்டுவோருக்கு தனியாக ஒரு குழாய் இணைப்பு மீட்டருடன் வழங்கப்படும். அவர்கள் மீட்டரில் உள்ள அளவுக்கு தொகை செலுத்தினால் போதுமானது. பத்திரகாளியம்மன் கோவில் முன்புள்ள சிமெண்டு சாலையை அகற்றிவிட்டு, புதிதாக தண்ணீர் தேங்காதவாறு சாலை அமைக்கப்படும். குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதியில் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சமுதாய பணியாளர் வருகை குறித்து ஏற்கெனவே மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்பிக்கப் பட்டுள்ளது. தற்போதும் புகார்கள் வரப்பெற்றுள்ளன. மகளிர் சுயஉதவிக்குழு கடன் பெறுவதில் உள்ள சிக்கல் உள்ளிட்டவைகள் குறித்து விசாரித்து கலெக்டருக்கு அறிக்கை அளித்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தொடர்ந்து, கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், சுகாதார அலுவலர் நாராயணன், பொறியாளர் ரமேஷ், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்