கோவில்பட்டிவிபத்தில் மேலும் ஒரு மாணவர் பலி
கோவில்பட்டிவிபத்தில் மேலும் ஒரு மாணவர் பலியானார். இதை தொடர்ந்து சாவு எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே கார்-பஸ் மோதிக் கொண்ட விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒரு மாணவர் பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.
என்ஜினீயரிங் மாணவர்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் கீர்த்திக் (வயது 23). இவரது நண்பர்கள் நாலாட்டின்புத்தூர் மேலத்தெருவை சேர்ந்த அஜய் (23), வானரமுட்டி வெயிலுக்கந்தபுரத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (24), வீரவாஞ்சிநகர் முதல் தெருவை சேர்ந்த அருண்குமார் (21), சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (22).
இவர்கள் 5 பேரும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர்.
3 பேர் பலி
நேற்று முன்தினம் கீர்த்திக் தனது காரில் நண்பர்களுடன் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டார். கோவில்பட்டி அருகே அய்யனேரி கிராமத்தில் உள்ள மேம்பாலம் பகுதியில் வந்த போது, எதிரே தனியார் டவுன் பஸ் வந்தது.
அப்போது, எதிர்பாராதவிதமாக காரும், பஸ்சும் மோதிக் கொண்டது. இதில் கீர்த்திக், அஜய், செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த 2 ேபரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 2 பேரும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் ஒருவர் சாவு
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விக்னேஷ் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது. அருண்குமாருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---------------