கோவில்பட்டியில்அனுமதிக்கப்படாத வழித்தடத்தில்இயக்கப்பட்ட மினிபஸ் பறிமுதல்
கோவில்பட்டியில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கப்பட்ட மினிபஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கப்பட்ட மினிபஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விதிகளை மீறி இயங்கிய 3 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்கள் புகார்
கோவில்பட்டி நகரில் மினி பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை. அந்த மினிபஸ்கள் அனுமதிக்கப்படாத வழிதடத்தில் இயங்குவதாகவும், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் மற்றும் அலுவலர்கள் நேற்று காலையில் கோவில்பட்டி மெயின் ரோட்டில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மினிபஸ்-ஆட்டோக்கள்
அப்போது அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கப்பட்ட மினி பஸ் ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதே போல அனுமதிச்சிட்டு, சாலை வரி, தகுதி சான்று, காப்புச் சான்று, புகைச்சான்று பெறாத ஒரு ஆட்டோ, 2 லோடு ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த 4 வாகனங்களுக்கும் ரூ.73 ஆயிரம் அபராதமும், சாலை வரி ரூ.7 ஆயிரத்து 100-ம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக வாகன உரிமையாளர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடிக்கடி வாகன சோதனை நடத்தப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.