காயல்பட்டினத்தில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
காயல்பட்டினத்தில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் கட்டிடதொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிட தொழிலாளி
காயல்பட்டினம் நகரசபை பகுதியான ஓடக்கரை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை மகன் மணிகண்டன் (வயது 21). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்பு கட்டிட வேலைக்குச் சென்று வந்தார்.
நேற்று முன்தினம் காலையில் ராஜதுரையின் நெருங்கிய உறவினர் ஒருவரின் பேத்திக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் மொட்டை போடும நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு வருமாறு மணிகண்டனை தந்தை அழைத்துள்ளார். அப்போது குடும்பத்துடன் முதலில் நீங்கள் செல்லுங்கள் என்றும், சிறிது நேரம் கழித்து தான் வருவதாகவும் மணிகண்டன் கூறியுள்ளார்.
தூக்கில் தொங்கினார்
சிறிது நேரம் கழித்து ஓடக்கரை சேர்ந்த ஞானசேகர் மகன் அன்பு என்பவரை கோவிலுக்கு தன்னுடன் வருமாறு அழைத்தாராம். அவரும் உடன் வருவதற்கு சம்மதித்து, மணிகண்டன் வீட்டுக்கு வந்துள்ளார். அவரை வீட்டு முன்பு நிற்கச்சொல்லிவிட்டு, பாத்ரூம் சென்றுவிட்டு வருவதாக வீட்டிற்குள் மணிகண்டன் சென்றாராம்.
ஆனால் நீண்டநேரமாக அவர் வெளியே வரவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அன்பு மணிகண்டன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். வீட்டின் பின்புறம் உள்ள சமையல் அறையில் போடப்பட்டுள்ள அஸ்பெட்டாஸ் ஷீட் கம்பியில் கயிற்றில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் மணிகண்டன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்பு கூச்சலிட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து மணிகண்டனின் தந்தை ராஜதுரை மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு அன்பு தகவல் கொடுத்துள்ளார். பதறிப்போன பெற்றோர் வீட்டிற்கு வந்து தூக்கில் தொங்கி கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணை
இது குறித்து ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் சம்பவ வீட்டுக்கு சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.