கர்நாடக மாநில பஸ்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
3 பேர் கைது
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சலீம் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது மைசூருவில் இருந்து கோவை நோக்கி கர்நாடகா மாநில பஸ் வந்தது. அந்த பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது பஸ்சில் பயணம் செய்த தேனியை சேர்ந்த அழகேசன் (வயது 29), சுரேஷ் (38) என்ற இருவரின் பையையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அதில் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன. இருவரும் விற்பதற்காக கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அழகேசன், சுரேஷ் இருவரையும் கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தார்கள்.
இதேபோல் தொடர்ந்து மைசூருவில் இருந்து வந்த மற்றொரு பஸ்சை நிறுத்தி, அதில் பயணம் செய்த கம்பத்தை சேர்ந்த ஜெகதீசன் (27) என்பவரின் பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து ஜெகதீசனையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தார்கள்.