காஞ்சிபுரத்தில், ஓபிஎஸ் தரப்பினர் வைத்த கொடிகள், பேனர்கள் அகற்றம்
காஞ்சிபுரத்தில், ஓபிஎஸ் தரப்பினர் வைத்த கொடிகள், பேனர்கள் அகற்றப்பட்டன.;
காஞ்சிபுரம்,
அ.தி.மு.க.வில் தலைமை பதவி யாருக்கு என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் விரைவில் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரசார பயணத்தை காஞ்சிபுரத்தில் இன்று மாலை தொடங்குகிறார். இதற்காக காஞ்சிபுரம் கனியனூர் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசுகிறார். 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை முன்பு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதன் காரணமாக வழிநெடுக ஓ.பி.எஸ்.சை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரம் களியனூர் பகுதியில் ஓபிஎஸ் அணியின் சார்பில் புரட்சிப் பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. கொடிகள், பேனர்கள் அகற்றப்பட்டன. அ.தி.மு.க. எடப்பாடி அணியினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது அதிமுக கொடிகள் நெடுஞ்சாலை பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.