காமயகவுண்டன்பட்டியில்வாலிபருக்கு அரிவாள் வெட்டு
காமயகவுண்டன்பட்டியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
காமயகவுண்டன்பட்டியில் உள்ள கருமாரிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் ஜெயபிரகாஷ் (வயது 28). இவரது தம்பி ஈஸ்வரன் (27). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈஸ்வரன் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயபிரகாசுக்கும், ஈஸ்வரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஈஸ்வரனை வெட்டினார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் படுகாயமடைந்த ஈஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜெயபிரகாசை தேடி வருகின்றனர்.