கல்வராயன்மலையில் உண்டு உறைவிட பள்ளியில் பழங்குடியினர் நலத்துறை முதன்மை இயக்குனர் திடீர் ஆய்வு

கல்வராயன்மலையில் மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியை ஆய்வு செய்த பழங்குடியினர் நலத்துறை முதன்மை இயக்குனர் அண்ணாதுரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

Update: 2022-06-01 16:52 GMT

கச்சிராயப்பாளையம்

உண்டுஉறைவிட பள்ளி

கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகிஅணை அரசு பழங்குடியின நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பழங்குடியினர் நல திட்ட இயக்குனர் இளங்கோவன், உதவி இயக்குனர் வைரமணி, ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறை முதன்மை இயக்குனர் அண்ணாதுரை  உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக விடுதிகளில் ஆய்வு செய்த அண்ணாதுரை பெண்கள் தங்கும் விடுதிகளில் போதிய பாதுகாப்பு இன்றி சுற்றுச் சுவர் இல்லாமலும், கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும் இருந்ததை பார்த்து அதற்கான காரணத்தை அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

துறைரீதியான நடவடிக்கை

பின்னர் சமையலறையை ஆய்வு செய்த அவர் போதுமான அளவுக்கு தூய்மை பணியாளர்கள் இருந்தும் விடுதிகளை சுத்தம் செய்யாமல் இருப்பதை பார்த்து இதுவே உங்கள் வீடாக இருந்தால் இப்படி வைத்து இருப்பீர்களா? உங்களை தொலைதூரத்துக்கு பணியிட மாற்றம் செய்தால் தான் சரிப்பட்டு வருவீர்கள் என்று கூறிய அவர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உதவி இயக்குனர் வைரமணிக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த அண்ணாதுரை விடுதிகளுக்கு அரிசி, பருப்பு வாங்கியது தொடர்பான அலுவலக கடிதம் மற்றும் ரசீது ஆகியவற்றை தலைமை ஆசிரியர் மற்றும் தாட்கோ செயற்பொறியாளர் பரமசிவம் ஆகியோரிடம் கேட்டபோது அவற்றை கொடுக்காமலும் உரிய பதில்சொல்ல முடியாமலும் திணறினார்கள்.

கூண்டோடு இடமாற்றம்

இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாதுரை உங்கள் அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்தால் தான் சரிப்பட்டு வருவீர்கள் என்று கடுமையான குரலில் எச்சரித்தார். அப்போது பழங்குடியினர் நல திட்ட இயக்குனர் இளங்கோவன், உதவி இயக்குனர் வைரமணி, உதவி செயற்பொறியாளர் பிரகாசம், கல்வராயன்மலை ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி கிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்