கழுகுமலை பகுதியில்குற்றச் செயல்களை தடுக்க 18 கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு
கழுகுமலை பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க 18 கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கழுகுமலை:
கழுகுமலை பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க 18 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா தலம்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை சுற்றுலா தலமாகும். இங்கு பிரசித்தி பெற்ற கழுகாசலமூர்த்தி குடவரை கோவில் மற்றும் மலை மீது பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் மலையை குடைந்து கட்டப்பட்ட வெட்டுவான் கோவில் மற்றும் சமணர் சிற்பங்கள் சிறப்பு வாய்ந்ததாகும். இவற்றை காண தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
கடந்த ஆண்டு கழுகுமலை பகுதிகளில் வர்த்தக சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் கழுகுமலை பகுதிகளில் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் கழுகுமலை பகுதிகளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் செயலிழந்து போனது. இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
18 கண்காணிப்பு கேமராக்கள்
தற்போது கழுகுமலை பகுதிகளில் கடந்த மாதம் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை முறையாக செயல்படுத்தி கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் தற்போது கழுகுமலை பகுதி மேல பஜார், கீழ பஜார், கோவில்பட்டி ரோடு, சங்கரன்கோவில் ரோடு, கயத்தாறு சாலை, காந்தி மைதானம், பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 18 கண்காணிப்பு கேமராக்கள் சரிசெய்து பொருத்தப்பட்டு போலீஸ் நிலையம் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இரவில் ரோந்து பணியையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.