தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் திருப்பி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்

அரசு பஸ்களில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Update: 2024-10-30 02:25 GMT

அரியலூர்,

அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தீபாவளி பயணங்களை பொருத்தவரையில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் முன்பதிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவினை பொறுத்தவரையில் அரசு போக்குவரத்து கழகங்களில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.

தேவைக்கேற்ப தனியார் ஒப்பந்த பஸ்கள் அரசு கட்டணத்திலேயே, அரசு வழங்குகின்ற பயணச்சீட்டு கொடுக்கப்பட்டு, அரசு ஒப்பந்த வாகனம் என்ற பெயரோடு இயக்கப்படும். கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது முன்பதிவு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் அதற்கேற்ப உயர்த்தப்படும்.

தனியார் பஸ்களில் செயலி மூலமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வரப்பெற்றதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளிடமிருந்து புகார் வரப்பெற்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் அது பயணிகளுக்கு மீண்டும் வழங்கப்படுவதுடன், தொடர்புடைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். செயலிகள் மூலம் விற்பனை செய்யப்படும் பயணச்சீட்டுகள் தொடர்பான புகார் வரப்பெற்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்