நள்ளிரவிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறையாத மக்கள் கூட்டம்

வெளியூர் செல்வதற்காக நள்ளிரவிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

Update: 2024-10-29 20:45 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை 31-ந்தேதி(நாளை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் தங்கி பணிபுரிந்து வரும் வெளியூர்வாசிகள், தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். சென்னையின் பல்வெறு பகுதிகளில் இருந்து நேற்று மாலையில் இருந்தே ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கிவிட்டனர்.

இதன் காரணமாக சென்னையை அடுத்த தாம்பரம், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

இதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அங்கு இணைய சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். அதே சமயம் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பணத்தை எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், நள்ளிரவிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, பேருந்துகள் வெளியே செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. இதற்கிடையில், நெட்வொர்க் பிரச்சினை காரணமாக முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் பேருந்துகளை தொடர்பு கொள்ள முடியாமல் அவதிடைந்தனர்.

தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க அரசு சார்பில் 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் 500 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை என பயணிகள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்