குன்னூர் அருகே இந்திரா நகர் பகுதியில்அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

குன்னூர் அருகே இந்திரா நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நகராட்சி அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-09-01 18:45 GMT

இந்திரா நகரின் நுழைவு வாயில் பகுதியில் வைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

குன்னூர்: குன்னூர் அருகே இந்திரா நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நகராட்சி அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடிப்படை வசதிகள் இல்லை

குன்னூர் அருகே இந்திரா நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதி குன்னூர் நகராட்சியின் 29-வது வார்டுக்கு உட்பட்டது. இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகளுக்கு நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கினாலும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். குறிப்பாக கழிவுநீர் கால்வாய், கழிப்பிடம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்று தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் தெரிவித்தும் சரியான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

போராட்டம்

இதனை கண்டித்தும், இந்திரா நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும் அப்பகுதி மக்கள் நேற்று காலை முதல் வேலைக்கு செல்லாமல் இந்திரா நகர் பகுதியின் நுழைவாயிலில் அமர்ந்தும், நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நகராட்சி அதிகாரிகள் வந்தனர். அப்போது அவர்களிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

குன்னூர் நகராட்சியில் வளர்ச்சி பணிக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திராநகர் பகுதியில் இதுவரை எந்தவொரு வளர்ச்சி பணியும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றனர். பின்னர் நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆய்வு செய்து உடனடியாக அடிப்படை வசதி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குன்னூர் நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்