தேனியில் பதிவு எண் இன்றி ஓடும் வாகனங்கள்
தேனியில் பதிவு எண் இன்றி ஆட்டோ, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் இயக்கப்படுவது அதிகரித்து வருகிறது
தேனி நகரில் போக்குவரத்து விதிமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேனி நகரில் வாகன பதிவு எண் பலகை இன்றி ஆட்டோக்கள், சரக்கு வேன்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பதிவு எண் இல்லாத ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். பெரும்பாலான பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஆட்டோக்களில் கட்டணம் குறைவாக இருக்கிறதா? என்று பார்ப்பதில் காட்டும் அக்கறையில் கொஞ்சம் கூட, ஆட்டோக்களில் ஆவணங்கள் முறையாக உள்ளதா? ஆட்டோ டிரைவரிடம் ஓட்டுனர் உரிமம் உள்ளதா? சீருடை அணிந்து ஆட்டோ ஓட்டுகிறாரா? என்பதை சரிபார்ப்பதில் காட்டுவதில்லை.
பதிவு எண் இல்லாமலும், முறையான ஆவணங்கள் இன்றியும் ஓடும் ஆட்டோக்கள் மீது போலீசாரும் தொடர் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், பள்ளிக் குழந்தைகளின் உயிரை பணயம் வைத்து சிலர் ஆட்டோக்களை ஓட்டி வருகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.