தேனியில்வங்கிக்கடன் வாங்கி தருவதாகரூ.1¼ கோடி மோசடி :பெண் வக்கீல் கைது

தேனியில் வங்கிக்கடன் வாங்கி தருவதாக 7 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்த பெண் வக்கீல் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-27 18:45 GMT

பெண் வக்கீல்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அப்பிப்பட்டியை சேர்ந்தவர் பகவதிராஜ். இவர் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு ஒரு புகார் கொடுத்தார்.

அதில், 'நான் கேரள மாநிலத்தில் எஸ்டேட் வாங்க ஆசைப்பட்டேன். அதற்கு என்னிடம் போதிய பணம் இல்லாததால் வங்கிக்கடன் பெற முடிவு செய்தேன். அப்போது எனக்கு பழனிசெட்டிபட்டி பூதிப்புரம் சாலையில் வசிக்கும் மோகன் மனைவி சித்ரா (வயது 52) அறிமுகம் ஆனார். அவர், வக்கீலாக இருப்பதோடு வங்கியில் கடன் பெற்றுக் கொடுக்கும் ஆலோசகராவும் இருப்பதாக கூறினார். கடன் பெறுவதற்கு முன்பணம் கேட்டார்.

நான் பல தவணையாக அவரிடமும், அவருடைய கணவர் மோகனிடமும் ரூ.24 லட்சத்து 90 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு கடன் பெற்றுக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர்' என்று கூறியிருந்தார்.

குவிந்த புகார்கள்

இந்த புகார் குறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சித்ரா, அவருடைய கணவர் மோகன் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சித்ரா மீது கேரளாவை சேர்ந்த 3 பேர், தமிழகத்தை சேர்ந்த 4 பேர் என மேலும் 7 பேர் இதேபோன்ற புகார்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்தனர்.

அதில் 6 பேரிடம் வங்கிக்கடன் வாங்கி தருவதாக ரூ.1 கோடியே 16¼ லட்சமும், மற்றொரு நபரிடம் வங்கி ஏலத்தில் எடுத்த சொத்து விற்பனை தொடர்பாக ரூ.23 லட்சத்து 50 ஆயிரமும் மோசடி செய்துவிட்டதாக புகாரில் கூறியிருந்தனர். அந்த புகார்கள் மீதும் போலீசார் விசாரணை நடத்தி சித்ரா, மோகன் ஆகிய 2 பேரையும் தேடி வந்தனர்.

கைது

அவர்களை பிடிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சக்திவேல் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரங்கநாயகி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நேற்று முன்தினம் சித்ராவை கைது செய்தனர். பின்னர் அவரை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்