தேனியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்

தேனியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடந்தது

Update: 2022-10-01 16:22 GMT

தேனி அல்லிநகரத்தில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகம் அருகே பெரியகுளம் சாலையோரம் டாஸ்மாக் கடை உள்ளது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் ஜெய்பீம் புரட்சிப்புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் அருந்தமிழரசு தலைமையில் அல்லிநகரம் பகுதியை சேர்ந்த மக்கள் பலர் அந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

அந்த கடையை மூடக்கோரியும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை மூடாதவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் மறுத்தனர். இதையடுத்து தற்காலிகமாக அந்த டாஸ்மாக் கடை நேற்று மூடப்பட்டது. இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்