தேனியில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

தேனியில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-10-31 18:45 GMT

ஆய்வுக்கூட்டம்

தமிழக சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவினர் அந்த குழுவின் தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் தேனிக்கு நேற்று வந்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் இந்த குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அதன் தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமை தாங்கினார்.

உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (போளூர்), அருள் (சேலம் மேற்கு), அன்பழகன் (கும்பகோணம்), ஈஸ்வரன் (திருச்செங்கோடு), சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), இ.பெ.செந்தில்குமார் (பழனி), பாலசுப்பிரமணியன் (சேலம் தெற்கு), முகமது ஷா நவாஸ் (நாகபட்டினம்), ராஜ்குமார் (மயிலாடுதுறை), செல்லூர் ராஜூ (மதுரை மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன். எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிப்பட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள், அந்த திட்டப் பணிகளின் தற்போதைய நிலை, அவற்றின் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வைத் தொடர்ந்து தேனி மதுரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்கூட்டம், கள ஆய்வின் போது ரூ.1½ கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த குழுவினர் வழங்கினர்.

ஆய்வு குறித்து குழுவின் தலைவர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், "ஆய்வுக்கூட்டத்தின் போது விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அக்கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்