கூடலூரில், அனைத்து பள்ளி வேன்களிலும் சோதனை-வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தகவல்

கூடலூரில், அனைத்து பள்ளி வேன்களிலும் அடிக்கடி சோதனை நடத்தப்படும் என்று வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமார் தெரிவித்தார்.

Update: 2023-08-10 18:45 GMT

கூடலூரில், அவசரகால கதவு உடைந்து விழுந்த தனியார் பள்ளிக்கூட வேனை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமார் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

கூடலூர்: கூடலூரில், அனைத்து பள்ளி வேன்களிலும் அடிக்கடி சோதனை நடத்தப்படும் என்று வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமார் தெரிவித்தார்.

அவசரகால கதவு உடைந்து விழுந்தது

கூடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட வேன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாலையில் மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு அவர்களது வீடுகளில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது 1-ம் மைல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென வேனின் பின்பக்கத்தில் இருந்த அவசர கால கதவு உடைந்து சாலையில் விழுந்தது.

இதைக்கண்ட மாணவர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் வேனின் டிரைவர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் வேன் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சாலையில் விழுந்த அவசரகால கதவை எடுத்துக்கொண்டு வேன் டிரைவர் அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அனைத்து பள்ளிக்கூட வேன்களிலும்...

இந்த நிலையில் கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமார் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கூட வேனை ஆய்வு செய்தார். தொடர்ந்து வேனின் தகுதி சான்றை தற்காலிகமாக ரத்து செய்தார்.

மேலும் குறைபாடுகளை சரி செய்த பிறகு தணிக்கைக்கு உட்படுத்தும் வகையில் வேனை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டுமென பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, அவசரகால கதவு மாதம் ஒரு முறையாவது திறந்து பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமான எடையில் கதவு பொருத்தப்பட்டுள்ள நிலையில் பாரம் தாங்காமல் உடைந்து விழுந்துள்ளது. இதனால் உரிய முறையில் சரி செய்து வரும் வரை, வேனின் தகுதி சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் அனைத்து பள்ளிக்கூட வேன்களிலும் தரம் குறித்து அடிக்கடி சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்