அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தட்டுப்பாடு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-13 17:06 GMT

தடுப்பூசி தட்டுப்பாடு

குழந்தை பிறந்த 45 நாட்களுக்கு பிறகு முதல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து முதல் தவணை மருந்து தரப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படுகின்றன.

இதில், நுரையீரல் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க நியுமோகோக்கல் (பி.சி.வி.) என்ற தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. நிமோனியா மற்றும் மூளை காய்ச்சல் காரணமாக ஏற்படும் இறப்புகளை குறைக்க இந்த தடுப்பூசி உதவும். தேனி உள்பட மாவட்டத்தில் சில அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த நியுமோகோக்கல் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.

பயப்பட வேண்டாம்

தேனி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 வார காலமாக இந்த தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக குழந்தைகளுக்கு செலுத்தப்படாமல் உள்ளது. மற்ற இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட போதிலும் இந்த தடுப்பூசி மருந்து இருப்பு இல்லை என்று கூறி பெற்றோர்களை சுகாதாரத்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் பலர் தடுப்பூசியை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த முடியாமல் போவதாக வருத்தப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "நியுமோகோக்கல் தடுப்பூசியை 45 நாட்களுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். 45 நாட்கள் கடந்து விட்டதால் போட முடியவில்லை என்று மக்கள் பயப்பட தேவையில்லை. தடுப்பூசி வரத்து ஏற்பட்டவுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அங்கன்வாடி மையங்கள் மூலமாகவும் குழந்தைகளுக்கு செலுத்தப்படும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்