சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-09-17 21:06 GMT

சேலம், 

தீக்குளிக்க முயற்சி

சேலம் அஸ்தம்பட்டி பிள்ளையார் நகரை சேர்ந்தவர் திருப்பதி (வயது 46). இவர் நேற்று காலை தனது மனைவி அந்தோணி (44), மகள்கள் மகாலட்சுமி (28), தமிழ்ச்செல்வி (22) ஆகியோருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தாங்கள் பாட்டிலில் மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீக்குளிக்க முயன்றவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கொலை வழக்குப்பதிவு

அப்போது போலீசாரிடம் திருப்பதி கூறும் போது, தனது மகன் விஸ்வநாதன் மீது ஏற்கனவே கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவாகி உள்ளது. தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அவரை விசாரணை நடத்துவதாக கூறி மாநகர போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் அவரை போலீசார் எங்கு அழைத்து சென்றனர்? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

ஆகையால் மகன் இருக்கும் இடத்தை போலீசார் தெரிவிக்க வேண்டும் என்று கூறி நாங்கள் தீக்குளிக்க முயன்றோம் என்றார். மேலும் தீக்குளிக்க முயன்றவர்கள் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்