திருச்செந்தூரில் காதலி வீட்டின்முன்புவாலிபர் தீக்குளித்து தற்கொலை

திருச்செந்தூரில் காதலி வீட்டின்முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-15 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் காதலி பேச மறுத்ததால், அவரது வீட்டின் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

காதல்

திருச்செந்தூர் கோவில் தெரு அண்ணா காலனியை சேர்ந்த திருவேங்கடம் மகன் பேச்சிமுத்து (வயது 25). இவர் திருச்செந்தூர் கோவில் அன்னதான திட்டத்தில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பேச்சிமுத்துக்கு அன்னதானத்தில் வேலை பார்க்கும் கணவனை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பேசமறுப்பு

இதை அறிந்த பெற்றோர், அந்த பெண்ணுடன் தொடர்பை துண்டித்து கொள்ளமாறு பேச்சிமுத்துவை கண்டித்துள்ளனர். இந்நிலையில், பேச்சிமுத்து நேற்று முன்தினம் இரவு நண்பரை பார்க்க போவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த பெண்ணின் வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. நீண்டநேரமாக அவர் கதவை தட்டியதாகவும், அந்த பெண் பேசமறுத்ததுடன், வீட்டின் கதவை திறக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

வீட்டின் முன்பு தீக்குளிப்பு

இதில் மனமுடைந்த பேச்சிமுத்து, அந்த வீட்டின் முன்பே தன்னுடைய உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நண்பர்கள் தீக்காயம் அடைந்த பேச்சிமுத்துவை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

போலீசார் விசாரணை

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பேச்சிமுத்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்