தூத்துக்குடியில் நிதி நிறுவனம் மற்றும் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் மோசடி

தூத்துக்குடியில் நிதி நிறுவனம் மற்றும் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் மோசடி செய்த இரண்டு பேர் சிக்கினர்.

Update: 2023-07-19 18:45 GMT

  போலி நகைகள்

நெல்லை மாவட்டம், தாழையூத்து சங்கர் நகரை சேர்ந்த ஷேக் முகமது மகன் முகமது சாகுல் ஹமீது (வயது 54). இவரும், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் புன்னக்காயல் சுப்பையா மகன் தனுநாயகம் (33) என்பவரும் சேர்ந்து தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 30 பவுன் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.10 லட்சத்து 13 ஆயிரத்து 820 கடன் பெற்று உள்ளனர். மேலும், அவ்வாறு கடன் பெற்ற தொகையை நிதி நிறுவனத்திற்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி உள்ளனர்.

அதேபோல் இந்த 2 பேரும் சேர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கியிலும் 15 பவுன் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்று அந்த கடனையும் திரும்ப செலுத்தாமல் ஏமாற்றி வந்து உள்ளனர்.

2 பேர் சிக்கினர்

இந்த மோசடி குறித்து நிதிநிறுவனம் மற்றும் தனியார் வங்கியின் மேலாளர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் செய்தனர். இதை தொடர்ந்து

அவரது உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயராம் மேற்பார்வையில் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முக சுந்தரம், ராஜ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் தலைமறைவாக இருந்த முகமது சாகுல் ஹமீது, தனுநாயகம் ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இதேபோன்று வேறு எங்கும் அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்