ஈரோட்டில் உள்ள கால்நடை தீவன தொழிற்சாலையில் அமைச்சர் நாசர் ஆய்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஆவின் அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்

2 பேர் பணியிடை நீக்கம்

Update: 2022-10-01 19:30 GMT

ஈரோட்டில் உள்ள கால்நடை தீவன தொழிற்சாலையில் அமைச்சர்நாசர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட ஆவின் அதிகாரிகள் 2 பேரை அமைச்சர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தார்.

அமைச்சர் ஆய்வு

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள நவீன கால்நடை தீவன தொழிற்சாலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கால்நடை தீவனம் பேக்கிங் செய்யப்படும் முறை, பாலித்தீன் பை விபரம், பதிவேடு பராமரிப்பு போன்றவைகளை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் குறைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையின் போது தரமான இனிப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.53 கோடி அளவிற்கு தயாரிக்கப்பட்டு அதிலும் 10 டன் இனிப்புகள் வீணாக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, ரூ.85 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது.

ரூ.250 கோடி இலக்கு

நடப்பாண்டு ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம். தமிழக முதல்-அமைச்சர் கூட்டுறவு சங்கங்கள் ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை வாங்க உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டு தரமான மூலப்பொருட்களை கொண்டு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆவின் பால் குறிப்பிட்ட சதவீதத்தில் எஸ்.என்.எப். மற்றும் பேட் அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

ஒரு சதவீதம் கூடுதலாக அல்லது குறைவாக இருந்தால் கூட அந்த பால் நிராகரிக்கப்படும். விவசாயிகள் கொண்டு வரும் பாலை இந்த தரத்திற்கு ஏற்ப நாங்கள் தயாரிக்கிறோம். ஆவின் விற்பனை கூடங்களில் ஆவின் பொருட்களை தவிர பிற பொருட்கள் விற்பனை செய்ய கூடாது என்ற உத்தரவு உள்ளது.

அரசு தேர்வாணையம்

இன்று (அதாவது நேற்று) கூட விழுப்புரம் மாவட்டத்தில் ஆவின் விற்பனை நிலையத்தில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்ததற்காக 2 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று தஞ்சாவூர், கோவை, சென்னையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அ.தி.மு.க.வினர், அவர்களது கட்சிகாரர்களுக்கு இவ்வாறு கடைகள் ஒதுக்கப்பட்டதால் தவறுகள் நிகழ்கின்றன.

அதை களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த புகார் சம்பந்தமாக மதுரையை சேர்ந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆவின் கால்நடை தீவனத்தில் ஏதாவது குறை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் நிறுவனத்தில் பணியாளர்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுவார்கள். ஆவின் கால்நடை தீவனத்தில் பூஞ்சை ஏற்பட்டதாக புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சருடன் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஆவின் பொது மேலாளர் எம்.பாலசுப்பிரமணியம், உதவி பொது மேலாளர் ஆர்.சண்முகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

2 பேர் பணியிடை நீக்கம்

முன்னதாக ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள ஆவினில் (மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம்) அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பால் பாக்கெட் உற்பத்தி, பால் விற்பனைக்கு அனுப்புதல் பதிவேடு முறைகேட்டில் ஈடுபட்டதாக செயற்பணியாளர் ரவிசந்திரன், மேலும் ஆவின் பாலகத்தில் வெண்ணெய், நெய், இதர பால் பொருட்கள் இருப்பு குறைவாக இருப்பதையும், முறைகேடு நடக்க காரணமாக இருந்த துணை மேலாளர் முகமது முஸ்தபா ஆகியோரையும் பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் நாசர் உத்தரவிட்டார். அதன் பேரில், ஆவின் பொதுமேலாளர் பாலசுப்பிரமணியம், செயற்பணியாளர் ரவிசந்திரன், துணை மேலாளர் முகமது முஸ்தபா ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்