ஈரோடு மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள் பொதுமக்கள்-வியாபாரிகள் குமுறல்

பொதுமக்கள்-வியாபாரிகள் குமுறல்

Update: 2022-10-12 19:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயத்தை பெற மறுக்கிறார்கள் என்று பொதுமக்கள், வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ரூ.10 நாணயத்தின் நிலை

பணம் பத்தும் செய்யும் என்பார்கள். ஆனால், பத்து ரூபாய் பணமே வேண்டாம் என்று ஓடுவதை ஈரோடு மாவட்டத்தில் பார்க்க முடியும். இந்திய அரசு மக்கள் பயன்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் ரூபாய் நோட்டுகள் மற்றும் காசுகளை அச்சிட்டு வங்கிகள் மூலம் மக்களுக்கு வழங்குகிறது.

இந்த பணத்தை நாடு முழுவதும் தங்கள் தேவையின் பொருட்டு பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒற்றை ரூபாய் பணமாக இருந்தால் கூட வீதியில் கிடந்தால் யாரும் குனிந்து எடுத்து பத்திரப்படுத்திக்கொள்வார்கள். ஆனால், ஈரோடு மாவட்டத்தில் பத்து ரூபாய் அதாவது ரூ.10 நாணயத்தை வீதியில் கொட்டி போட்டாலும் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நிலைதான் இருக்கிறது. ரூ.10 நாணயம் வெளிவந்த சில நாட்களிலேயே ஈரோடு மாவட்டத்தில் இந்த நாணயங்கள் செல்லாது என்று ஒரு புரளி கிளம்பியது. குறிப்பாக அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் டிக்கெட் வாங்கும்போது அது செல்லாது என்று கண்டக்டர்கள் கூறியதாகவே தொடக்கத்தில் இந்த புரளி கிளம்பியது. அது மெல்ல மெல்ல பூதாகரமாகி டீக்கடை, மளிகைக்கடை, வங்கி என்று வளர்ச்சி அடைந்து 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இல்லை என்கிற அளவுக்கு ஈரோடு மாவட்டம் இருக்கிறது.

விழிப்புணர்வு

இது ஈரோடு மாநகரம் மட்டுமல்ல, மலைக்கிராமமான தாளவாடியிலும் இதே நிலைதான் உள்ளது. ஈரோட்டில் ரூ.10 நாணயம் செல்லும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானி காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ரூ.3½ லட்சம் அளவுக்கு வெறும் 10 ரூபாய் நாணயங்களை வழங்கி மோட்டார் சைக்கிள் வாங்கினார். ஆனாலும், ஈரோடு மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் என்றாலே பொதுமக்களும், வியாபாரிகளும் அலறியடித்து ஓடுகிறார்கள்.

முன்னோடி வங்கி மேலாளர்

இதுபற்றி ஈரோடு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜி.ஆனந்தகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்கள் குறித்து தெளிவான விளக்கத்தை கூறி இருக்கிறது. பொதுமக்கள் அச்சமின்றி 10 ரூபாய் நாணயங்களை கடைகளில் கொடுத்து பொருட்கள் வாங்கலாம். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில்தான் இந்த பிரச்சினையை நான் பார்க்கிறேன். ஆனால் சென்னையில் யாரும் 10 ரூபாய் நாணயம் வேண்டாம் என்று சொல்வதில்லை. பொதுமக்கள் தாராளமாக பயன்படுத்துகிறார்கள். வியாபாரிகளும் பெற்றுக்கொள்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். விரைவில் பொதுமக்கள் ரூ.10 நாணயத்தை அச்சமின்றி பயன்படுத்தும் நிலை வரும். தற்போது மொபைல் செயலிகள் மூலம் ஒருங்கிணைந்த கட்டண சேவை திட்டங்கள் (யு.பி.ஐ.) மூலம் 1 ரூபாய் கூட பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால் 10 ரூபாய் சில்லரை தொடர்பான பிரச்சினை பெரிதும் வரவில்லை. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 10 ரூபாய் நாணயங்களை வங்கி பரிமாற்றத்தின்போது பயன்படுத்தலாம். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக நாணயங்கள் வழங்கினால் அது எப்படி அவர்களுக்கு கிடைத்தது என்ற விளக்கத்தை வங்கிக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முழுவதும் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்தாலும், ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களை பார்க்கவே முடிவதில்லை என்பது மக்கள் எவ்வளவு அச்சத்தில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்களை வைத்துக்கொண்டு சிரமப்படுவதையும் பார்க்க முடிகிறது. எனவே அரசு, போக்குவரத்துக்கழகம் உள்ளிட்டவை மூலம் ரு.10 நாணயங்களை புழக்கத்துக்கு கொண்டு வருவதே மக்களிடம் ஏற்படுத்தும் விழிப்புணர்வாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்