ஈரோடு மாவட்டத்தில் 1,500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாஅமைச்சர் முத்துசாமி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 1,500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் 1,500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
வளைகாப்பு விழா
ஈரோடு சங்கு நகர் பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் அந்தியூர் ப.செல்வராஜ், அ.கணேசமூர்த்தி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, 130 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சி பகுதியில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு குழந்தையின் வளர்ச்சி கருவாக உருவான நாளில் இருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும்.
சீர்வரிசை
வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும், நன்மையும் கிடைக்காமல் அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட கூடாது என்ற தொலை நோக்கு பார்வையுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் சுமார் 1,500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியை சார்ந்த 130 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், வளையல், பேரீட்சை, பழவகைகள் மற்றும் 5 வகை உணவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் பயன்பெறும் கர்ப்பிணிகளுக்கு, டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் சுகாதாரத்துறையின் மூலம், தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் முத்து சாமி கூறினார்.
இதில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர்.