ஈரோடு மாவட்டத்தில் தொலைந்துபோன 66 செல்போன்கள் மீட்பு
ஈரோடு மாவட்டத்தில் தொலைந்துபோன 66 செல்போன்கள் மீட்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்கள் தொலைந்து விட்டதாக கூறி புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஈரோடு மாவட்ட சைபர் செல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போன் தொலைந்து போன தேதி, நாள் மற்றும் இதர விவரங்களை வைத்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் துரித நடவடிக்கையால் ரூ.9 லட்சத்து 44 ஆயிரத்து 982 மதிப்பிலான 66 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்துகொண்டு செல்போன்களை உரியவர்களிடம் வழங்கினார்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ரூ.69 லட்சத்து 70 ஆயிரத்து 448 மதிப்பிலான 473 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.