எழும்பூரில் ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை; கோவில் திருவிழாவில் அடிதடி தகராறில் பெயிண்டர் சாவு

எழும்பூரில் ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மந்தைவெளியில் கோவில் திருவிழாவில் நடந்த அடிதடி தகராறில் பெயிண்டர் உயிரிழந்தார்.

Update: 2023-09-12 08:15 GMT

ரவுடி வெட்டிக்கொலை

சென்னையை அடுத்த புழல் காவாங்கரை 15-வது தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 24). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் நேற்று முன்தினம் இரவு எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள டீக்கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன் மீது அமர்ந்திருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் திடீரென்று சத்யாவை சுற்றி வளைத்தனர். அவர் தப்பித்து ஓடுவதற்கு முயற்சித்தார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொன்றது. எப்போதும் ஆட்கள் நடமாட்டத்துடன் இருக்கும் மாண்டியத் சாலையில் நடந்த இந்த துணிகர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த எழும்பூர் போலீசார் சத்யாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். 2020-ம் ஆண்டு மாதவரம் நாய் ரமேஷ் என்ற ரவுடி ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சத்யாவின் பெயரும் அடிபட்டது.

4 பேர் கைது

எனவே ரவுடி நாய் ரமேஷ் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக அவரது கூட்டாளிகள்தான் சத்யாவை தீர்த்துக் கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். அதன்படி அவரது கூட்டாளிகளான புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரூபன், வெள்ளை சரவணன், டேவிட் பிரகாஷ், அருண்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில் திருவிழாவில் தகராறு

இந்த கொலை சம்பவம் அரங்கேறிய சிறிது நேரத்தில் மந்தைவெளியில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (32). பெயிண்டர். இவர், மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் அருகே உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் மதுபோதையில் ஆடி சென்றார். அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெயிண்டர் பார்த்திபனும் (28) குடிபோதையில் ஆட்டம் போட்டார்.

அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பார்த்திபன் தாக்கியதில் தினேஷ் கீழே சரிந்து விழுந்தார். சுய நினைவின்றி கிடந்த தினேசை அவரது நண்பர் பாலாஜி மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். தினேசின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் பார்த்திபன் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

சென்னையில் ஒரே நாள் இரவில் 2 கொலைகள் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்