பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் மானியத்துடன் கடன் உதவி

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்

Update: 2022-09-07 17:56 GMT

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு கடன் பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

3 சதவீதம் மானியம்

ஆதிதிராவிட மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களான வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு 30 சதவீத அல்லது திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு 50 சதவீதம் அல்லது திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கப்படும்.பழங்குடியின மக்களுக்காக செயல் படுத்தப்படும் திட்டங்களான தொழில் முனைவோர் திட்டம், நில மேம்பாட்டு திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டம் ஆகும். இத் திட்டங்களுக்கு 50 சதவீத அல்லது திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும்.

வாக்காளர் அட்டை

மேற்கண்ட திட்டங்களில் ஆதிதிராவிட இனத்தவராக இருப்பின் http://application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற இணைய தளத்தில் குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்று, சாதிசான்றிதழ், ஆதார் அட்டை, வாக்களார் அடையாள அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, வாகன கடன் பெறுவதற்கான ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ், பாஸ்போட் அளவு புகைப்படம், கல்வி தகுதி சான்றிதழ், நிலம் சார்ந்த திட்டங்களுக்கு நிலம் தொடர்பான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணிநேரமும் பதிவுசெய்யலாம்.மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்