திண்டுக்கல் குடைப்பாறைபட்டியில் அனுமதியின்றி விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணியினர் 25 பேர் கைது

திண்டுக்கல் குடைப்பாறைபட்டியில் அனுமதியின்றி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து முன்னணியினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-08-31 17:26 GMT

இந்து முன்னணி

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் ஊர் பொதுமக்கள் சார்பில், ஆண்டு தோறும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் குடைப்பாறைப்பட்டி விநாயகர் சிலை ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் பேகம்பூர் பள்ளிவாசல் வழியாக சென்று கோட்டைக்குளத்தில் கரைக்கப்படுவது வழக்கம்.

அதேநேரம் குடைப்பாறைப்பட்டியில், இந்து அமைப்பினர் சிலை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளிப்பது இல்லை. எனினும் இந்து முன்னணியினர் ஒவ்வொரு ஆண்டும் சிலை வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி இன்று குடைப்பாறைப்பட்டியில் திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

அனுமதியின்றி சிலை ஊர்வலம்

இதற்கிடையே இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ், மாவட்ட செயலாளர் சஞ்சீவிராஜ், நகர தலைவர் ஞானசுந்தரம் உள்ளிட்டோர் தாரை, தப்பட்டை முழங்க விநாயகர் சிலையை குடைப்பாறைப்பட்டி கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றனர்.

இதையடுத்து சிலை ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அனுமதியின்றி ஊர்வலமாக எடுத்து வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்து முன்னணியினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த விநாயகர் சிலையை கோட்டைக்குளத்தில் போலீசாரே கரைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் குடைப்பாறைப்பட்டியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்