கடலூரில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
கடலூரில் நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பாதிரிப்புலியூர்,
தமிழகத்தில் கடந்த 2-ந் தேதி பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி நவம்பர் 6-ந் தேதி (அதாவது இன்று) பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது.
இதற்கிடையே பேரணியை உள்அரங்கிலோ அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தீவிர பாதுகாப்பு
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பாடலீஸ்வரர் கோவில் சன்னதி தெரு, திருப்பாதிரிப்புலியூர்-திருவந்திபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் பீட் மூலமும் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம் பகுதியிலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.