கடலூரில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

கடலூரில், குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Update: 2023-08-17 20:09 GMT

கடலூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறுவட்ட செயலாளர் லிட்டில் பிளவர் வரவேற்றார்.

தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக தடகள போட்டிகள் நடந்தது. 100 மீ., 200மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ., 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், தொடர் ஓட்டங்கள், தடை தாண்டி ஓடுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், வட்டு, குண்டு, ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் கடலூர் குறுவட்டத்தை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

நடன நிகழ்ச்சிகள்

போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டியில் உடற்கல்வி இயக்குனர்கள் ராணி, அசோகன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். வாலிபால், கால்பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு குழு விளையாட்டு போட்டிகளும் நடக்க இருக்கிறது. முன்னதாக தொடக்க நிகழ்ச்சியாக மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த போட்டிகள் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை பல்வேறு பிரிவுகளில் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்