வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு மிக அதிகம்
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு மிக அதிகம் என்று கன்னியாகுமரி தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
நாகர்கோவில்:
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு மிக அதிகம் என்று கன்னியாகுமரி தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
கன்னியாகுமரி தினவிழா
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த தினத்தை கொண்டாடும் விதமாக பாரதீய இதிகாச சங்கலன் சமிதியின் தமிழக கிளை சார்பில் 'கன்னியாகுமரி தின விழா' நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் அமிர்தா என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவில் சமிதியின் மாநில தலைவர் சுப்பிரமணியபிள்ளை வரவேற்று பேசினார்.
நாகர்கோவில் அமிர்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசுப்பன், நெல்லை பி.எஸ்.என். கல்வி நிறுவனங்களின் தலைவர் சுயம்பு ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
ஆன்மிகம் அழிப்பு
சென்னை மாகாணத்துடன் இணைந்ததால் குமரி மாவட்டத்துக்கு இன்று மகிழ்ச்சியான நாள். பல போராட்டங்களுக்குப்பிறகு சென்னை மாகாணத்துடன் குமரி மாவட்டம் இணைக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவை ஒருங்கிணைக்க பாடுபட்டார். இந்த மாவட்டம் தமிழக பகுதிகளுடன் இணைய நமது முன்னோர்கள் பட்ட துன்பங்கள், இன்னல்களை நாம் இன்று மறந்து விட்டோம். குமரி மாவட்டம் புண்ணிய பூமியாகும். ஆதிபராசக்தி தேவி கன்னியாகுமரியில் எழுந்தருளி மக்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள் நம் நாட்டின் உண்மையான வரலாற்றை அழித்துவிட்டு, மேற்கத்திய கண்ணோட்டத்தோடு வரலாற்றை எழுதியுள்ளனர். நம் நாட்டின் ஆன்மிகத்தை அழிக்கும் வகையிலும், கலாசாரத்தை இழிவு படுத்தும் வகையிலும் வரலாற்றை எழுதியுள்ளனர். ஆனால் உண்மை அதுவல்ல.
ஆய்வுகள்
பாரதம் என்றால் ஆன்மிக கலாசாரம் நிறைந்த பன்முகத்தன்மைக்கொண்ட நாடு. அதை புரிந்துகொள்ள இன்னும் நிறைய நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தவறான வரலாற்று கண்ணோட்டம் இந்தியாவில் இன்னும் உள்ளது. அதற்கு இதுபோன்ற அமைப்புகள் முன்வந்து விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும். நம் நாட்டின் உண்மையான வரலாறு குறித்த ஆய்வுகள் இன்னும் நடத்தப்பட வேண்டும்.
நம் நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்கு முன்பு இந்தியா உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் இருந்தது. உலக பொருளாதாரத்தில் 30 சதவீத பொருளாதாரம் நம் நாட்டில்தான் இருந்தது. பிரெஞ்ச், டச்சு, போர்ச்சுகீசியர்கள், பிரிட்டீஸ்காரர்கள் உள்ளிட்டோர் 150 ஆண்டுகளாக கம்பெனி நடத்தி இங்கிருந்து செல்வத்தை கொள்ளையடித்து கொண்டு போய்விட்டனர். இதற்கு முன்பு பலரும் நம்மை ஆண்டார்கள். ஆனால் மேற்கத்தியர்கள் வந்த பிறகுதான் நம் பொருளாதாரம் பெருமளவு கொள்ளையடிக்கப்பட்டது.
வரலாறு மாற்றி எழுதப்பட்டது
நம் வரலாறு அழிக்கப்பட்டு, மாற்றி எழுதப்பட்டது, கலாசாரம் தவறாக பரப்பப்பட்டது. அதனால் நமது உண்மையான வரலாறை வெளிக்கொணர வேண்டிய பெரிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியைத்தான் உற்று நோக்கி வருகின்றன. அதனால்தான் 2047 என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்திய பொருளாதாரம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெரும் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதில் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியம்.
இளைஞர்கள் பங்கு
மகாகவி பாரதியார் செப்புமொழி பதினெட்டு உடையாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாடல் மூலம் நமது நாட்டின் ஒற்றுமை குறித்து அழகாக பாடியுள்ளார். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் நாட்டின் பலம். அதனை மேற்கத்தியர்கள் பிரிவினையாக சித்தரித்துவிட்டனர். இந்தியா என்ற குடும்பத்தில் நாம் அனைவரும் ஒரு அங்கம். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள், மாணவர்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது. அவர்கள் எதிர்கால இந்தியாவை கட்டமைப்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
நினைவுப்பரிசு
விழாவில் கவர்னருக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டது. நடராஜர் சிலை, மாதா அமிர்தானந்தமயி பற்றிய புத்தகம் ஆகியவை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
முடிவில் பாரதீய இதிகாச சங்கலன் சமிதி தமிழக இணைச் செயலாளர் பகவதிப்பெருமாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், பாரதீய இதிகாச சங்கலன் சமிதி ஒருங்கிணைப்பு செயலாளர் கதிரவன், நிர்வாகிகள் சுரேஷ்குமார், டாக்டர் சீனிவாச கண்ணன், நாஞ்சில் ராஜா, காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.