சின்னசேலத்தில் குடும்ப பிரச்சினையில் 2 வயது குழந்தையை தவிக்க விட்டு சென்ற தந்தை உடன்பிறந்த சகோதரனைப்போல் பாதுகாத்த சிறுவனுக்கு போலீசார் பாராட்டு

சின்னசேலத்தில் குடும்ப பிரச்சினையில் 2 வயது குழந்தையை தந்தை தவிக்க விட்டு சென்று விட்டார். அந்த குழந்தையை உடன் பிறந்த சகோதரனைப்போல் பாதுகாத்த சிறுவனை போலீசார் பாராட்டினர்.

Update: 2023-10-09 18:45 GMT

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள வேதவல்லி மாரியம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் 2 வயது ஆண் குழந்தை ஒன்று சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதை அங்கு விளையாடிக்கொண்டிருந்த விஜயபுரம் பகுதியை சேர்ந்த இளையராஜா மகன் கோகுல் (வயது 10) என்ற சிறுவன் பார்த்து, அரவணைத்துக்கொண்டான். அந்த குழந்தை யாருடையது என்று தெரியாததால், அவன் அந்த குழந்தைக்கு உடுத்த உடையும், சாப்பிட உணவையும் கொடுத்தான். அந்த குழந்தையும், கோகுலிடம் மிகுந்த அன்பை பொழிந்தது.

குடும்ப பிரச்சினை

நீண்ட நேரமாகியும் குழந்தையை தேடி பெற்றோர் யாரும் வராததால், அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது கூகையூர் ரோடு பேருந்து நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய ஒருவர், அந்த குழந்தையை வேதவல்லி மாரியம்மன் கோவில் அருகே விட்டு விட்டு மீண்டும் அதே பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, அங்கிருந்து பஸ்சில் ஏறி சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த நபர் யார் என்று விசாரித்தபோது அவர் சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த ஆறுகளூர் பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பது தெரிந்தது.

மேலும் சின்னதுரைக்கும் அவரது மனைவி யசோதாவுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சின்னதுரை, யசோதா வேலைக்கு சென்ற பிறகு, 2 வயது குழந்தையை தூக்கி வந்து சின்னசேலத்தில் தவிக்க விட்டு சென்றது தெரிந்தது.

சிறுவனுக்கு பாராட்டு

இதையடுத்து சின்னதுரை மற்றும் அவரது மனைவியை போலீசார் தொடர்பு கொண்டு சின்னசேலம் போலீஸ்நிலையத்துக்கு வரவழைத்து அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை உடன் பிறந்த சகோதரனை போல் பாதுகாத்த சிறுவன் கோகுலை கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்