சிதம்பரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம்

சிதம்பரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.

Update: 2022-07-16 16:37 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள அம்பேத்கர் தெருவில் பாலமன் வாய்க்கால் கரையோரம் 100-க்கும் மேற்பட்ட மக்கள், அப்பகுதியில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் சிதம்பரம் நகர போலீசார் நேரில் சென்று நீர்நிலை ஆக்கிரமிப்பு உள்ளதாக கூறி பொதுமக்கள் அனைவரும் வீடுகளை காலி செய்து செல்லுமாறு நோட்டீஸ் கொடுத்தனர். இதையடுத்து சிலர் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். மீதமுள்ள சுமார் 56 வீடுகளை பொதுமக்கள் காலி செய்யாமல் இருந்தனர்.இந்த நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ், சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் 2 பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

வாக்குவாதம்

இதுபற்றி அறிந்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள், உங்களுக்கு ஏற்கனவே வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் கால அவகாசமும் வழங்கப்பட்டது. இனிமேலும் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து வீடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்