சென்னிமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னிமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

Update: 2023-09-23 21:42 GMT

சென்னிமலை

சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் ஜான் பீட்டர் என்கிற அர்ச்சுணன் என்பவர் வீட்டில் கடந்த வாரம் ஜெப கூட்டம் நடந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் அங்கு சென்று ஜெப கூட்டம் நடத்தக்கூடாது என ஜான் பீட்டர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து ஜான் பீட்டர் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து ஜான் பீட்டர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியவர்களை உடனே கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இந்தநிலையில் சென்னிமலை பஸ் நிலையம் அருகே நேற்று காலை 10 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் கிறிஸ்தவ அமைப்பினர் ஒன்று திரண்டனர். இதனால் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னிமலை பஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில் போலீசார் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கினர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் கமலநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் முதன்மைச் செயலாளர் பாவரசு, சென்னிமலை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி மற்றும் கட்சியின் நிர்வாகிகள், பல்வேறு ஊர்களில் இருந்து வந்த கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்