அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி வனப்பகுதியில் சென்னம்பட்டி வனத்துறை ஊழியர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னம்பட்டி வனச்சரகம் ஜரத்தல் பீட், சராக வனப்பகுதியில் சென்றபோது ஆண் யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்தனர். உடனே இதுபற்றி சென்னம்பட்டி வனச்சரக அலுவலர் ராஜா, மாவட்ட வனத்துறை அதிகாரி கவுதம் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள், வனப் பணியாளர்கள் ஆகியோருடன் சென்னம்பட்டி கால்நடை டாக்டர் மாலதி அங்கு சென்றார். பின்னர் அவர் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதன்பின்னர் அவர் கூறும்போது, 'இறந்த யானைக்கு சுமார் 40 வயது இருக்கும். வயது முதிர்வின் காரணமாக யானை இறந்துவிட்டது' என்றார்.
தொடர்ந்து அங்கு குழி தோண்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது. பின்னர் யானையின் தந்தங்கள் மற்றும் கோரைபற்கள் வெட்டி எடுக்கப்பட்டு பாதுகாப்பாக வனத்துறை அலுவலகத்தில் உள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டது.